
சிவகார்த்திகேயனின் குடும்பம், சினிமா பற்றிய அனுபவங்கள்: நாஸ்காம் கூட்டத்தில் பகிர்வு
அடுத்த மாதம் 5ஆம் தேதி சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘மதராஸி’ வெளியாகவிருக்கிறது. இதனுடன், தற்போது ‘பராசக்தி’ என்ற திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிலும் பிஸியாக உள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நாஸ்காம் கூட்டத்தில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், தனது குடும்ப வாழ்க்கை, சினிமா, மற்றும் தன்னுடைய பிள்ளைகள் குறித்த பல்வேறு விஷயங்களை திறந்த மனதுடன் பகிர்ந்தார். அந்த நிகழ்வின் முழு காணொளி தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது.
பேச்சில் அவர் கூறியதாவது:
“எனக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். நான் எப்போதும் அவர்களுடன் விளையாடுகிறேன். என் மனைவிதான் அவர்களை முழுமையாக கவனிக்கிறார். அவர்தான் உண்மையான சிரமத்தை அனுபவிக்கிறார்.
நான் ஒரு கண்டிப்பான தந்தை கிடையாது. இன்று இந்த நிகழ்வுக்கு என் மகளையும் அழைத்து வந்திருக்கிறேன். இங்கே இருக்கும் பெண்களிடமிருந்து அவருக்கு இன்ஸ்பிரேஷன் கிடைக்கும் என்பதற்காகவே இங்கு கொண்டு வந்தேன்.
என் முதல் மகனுக்கு நான்கு வயதாகிறது, இரண்டாவது மகனுக்கு ஒரு வயதாகிறது. (சிரித்துக்கொண்டே) இந்திய மக்கள் தொகையில் நான் ஒரு பங்களிப்பு செய்துள்ளேன்.
படப்பிடிப்பு பிசியான நேரங்களில் வீட்டுக்கு வந்தவுடன், என் குழந்தைகள் எனக்கு நிம்மதியைத் தருகிறார்கள்.
தற்போது என் மகள் ஆராதனாவுடன் நெருக்கமாக இருக்கிறேன். சினிமா துறையில் மூன்று மாதங்கள் தொடர்ந்து வேலை இருக்கும்; ஒருமாதம் திடீரென விடுப்பாகிவிடும். அந்த நேரத்தை குடும்பத்துடன் செலவழிக்கிறேன்.
தொலைக்காட்சி காலத்தில் இது சாத்தியமில்லை. ஆனால், என் பிள்ளைகளிடமிருந்து கிடைக்கும் அன்பு மிக உண்மையானது. அந்த உண்மைதான் எனக்கும் தேவையானது.”